உடுப்பியில் தொழில்அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை-பணம் திருட்டு
உடுப்பியில் தொழில்அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடி சென்றதாக வேலைக்கார தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
மங்களூரு-
உடுப்பியில் தொழில்அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடி சென்றதாக வேலைக்கார தம்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில்அதிபர்
உடுப்பி மாவட்டம் மணிப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட சிவள்ளி அருகே வித்யாரண்யநகர் பகுதியை சேர்ந்தவர் ரட்சவி ஷெட்டி. தொழில்அதிபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது வேலைக்கார தம்பதிகளான ராஜூவும், கீதாவும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ரட்சவி ஷெட்டி தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வேலைக்கார தம்பதிகளான ராஜூ, கீதா ஆகியோர் மாயமாகி இருந்தனர். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரூ.30 லட்சம் திருட்டு
அதாவது, அவரது வீட்டின் பீரோ திறந்த நிலையில் கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த நகை, பணம் மாயமாகி இருந்தது. இதனால் வேலைக்கார தம்பதியான ராஜூவும், கீதாவும் தான் பீரோைவ உடைத்து நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மொத்தம் பீரோவில் இருந்த ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து மணிப்பால் போலீசில் ரட்சவி ஷெட்டி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், ரட்சவி ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
தம்பதிக்கு வலைவீச்சு
இதையடுத்து மணிப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜூ மற்றும் அவரது மனைவி கீதாவை வலைவீசி தேடி வருகிறார்கள். வேலை பார்த்த வீட்டிலேயே கணவன்-மனைவி கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.