3 ஆண்டு தகாத உறவு கசந்தது... நடன அழகி கொடூர கொலை; ராணுவ உயரதிகாரி வெறிச்செயல்
உத்தரகாண்டில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து விட்டு, அவரை கொடூர கொலை செய்த ராணுவ உயரதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.;
டேராடூன்,
உத்தரகாண்டின் டேராடூன் நகரில் பண்டிட்வாரி பிரேம்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேந்து உபாத்யாய் (வயது 42). திருமணம் நடந்து மனைவி, மகள் என குடும்பத்துடன் வசித்து வரும் இவர், கிளமெண்ட் டவுன் பகுதியில் ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஆக பதவி வகித்து வருகிறார்.
மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் நடன பார் ஒன்றில், நேபாள நாட்டை சேர்ந்த ஷ்ரேயா சர்மா (வயது 30) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்திருக்கிறார்.
அந்த பாரில் நடனம் ஆடி வந்த அவரை, சிலிகுரியில் இருந்து அழைத்து கொண்டு டேராடூன் நகருக்கு வந்துள்ளார். இவர்களுக்கு இடையே 3 ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால், பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் ஷ்ரேயாவை தனியாக தங்க வைத்துள்ளார்.
இவர்களின் தகாத உறவு பற்றி சில மாதங்களுக்கு முன் உபாத்யாயின் மனைவிக்கு தெரிந்துள்ளது. அவர் பிளாட்டுக்கு சென்று ஷ்ரேயாவுடன் சண்டை போட்டுள்ளார்.
இதன்பின், ஷ்ரேயாவை திருப்பி அனுப்பி விடுகிறேன் என மனைவியிடம் உபாத்யாய் கூறியுள்ளார். உபாத்யாய்க்கு திருமணம் ஆகி குடும்பத்துடன் உள்ள சூழலில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஷ்ரேயா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், உபாத்யாய் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவில் ராஜ்பூர் சாலையில் உள்ள கிளப்புக்கு ஷ்ரேயாவை அழைத்து சென்று, அவருடன் ஒன்றாக மதுபானம் குடித்துள்ளார். இதன்பின்பு காரில் நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என கூறியுள்ளார். ஷ்ரேயாவும் ஒப்பு கொண்டார்.
ஆனால், தனோ சாலையை அடைந்ததும் நகரின் ஆளில்லாத பகுதிக்கு காரை செலுத்தியுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில், காரை ஓரத்தில் நிறுத்தி விட்டு, சுத்தியலால், ஷ்ரேயாவின் தலையில் கடுமையாக மீண்டும், மீண்டும் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ஷ்ரேயா உயிரிழந்து விட்டார். இதன்பின், அவருடைய உடலை சாலையோரம் வீசியுள்ளார். அவருடைய முகத்தில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படும் திரவம் ஊற்றி தடயங்களை அழிக்க முற்பட்டுள்ளார். அதன்பின்னர், அவர், காரில் தப்பிவிட்டார். எனினும், மழை பெய்ததில், திரவம் கரைந்து போய்விட்டது. அவருடைய முகம் அடையாளம் காணப்பட்டது.
போலீசார் 24 மணிநேரத்தில் விசாரணை செய்து குற்றவாளியான உபாத்யாயை கைது செய்தனர். விசாரணையில் அவர் உண்மையை ஒப்பு கொண்டார்.