பச்சிளம் குழந்தைகளுடன் சகோதரிகள் மூவர் கிணற்றில் குதித்து தற்கொலை - இருவர் கர்ப்பிணிகள்; நெஞ்சை உலுக்கிய சம்பவம்

பச்சிளம் குழந்தைகளுடன் சகோதரிகள் மூவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-28 20:59 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ஷபியா கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் மீனா (25 வயது), மம்தா (வயது 23), காம்லீஸ் (20).

இந்த மூவருக்கும் ஒரேகுடும்பத்தை சேர்ந்த சகோதரர்களை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். சகோதரிகளில் இருவருக்கு குழந்தை உள்ளது. மூத்த சகோதரிக்கு 4 வயதிலும், 2-வது சகோதரிக்கு பிறந்த 27 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையும் உள்ளது. அதேவேளை, மூத்த சகோதரியும், கடைசி சகோதரியும் கர்ப்பமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், சகோதரிகள் 3 பேரையும் அவரது கணவர்கள் மற்றும் கணவர்களின் வீட்டார் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் சகோதரிகளை கடுமையாகவும் தாக்கியுள்ளனர். இதனால், சகோதரிகள் 3 பேரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

இதனிடையே, சகோதரிகள் மூவரும், தங்கள் 2 பச்சிளம் குழந்தைகளுடன் கடந்த 25-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வெகுநேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அனைவரையும் தேடியுள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், 4 நாட்களாக தீவிர தேடுதல் பணி நடந்த நிலையில் நேற்று கிராமத்திற்கு அருகே உள்ள பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு 2 பச்சிளம் குழந்தைகளுடன், சகோதரிகள் 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 5 பேரும் கிண்ற்றுக்குள் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார், உறவினர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 5 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதால் சகோதரிகள் 3 பேரும் தங்கள் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சகோதரிகள் 3 பேரில் 2 பேர் கர்ப்பிணிகள் என்ற தகவல் அனைவரும் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சகோதரிகளில் ஒருவரான காம்லீஸ் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில், நாங்கள் செல்கிறோம், மகிழ்ச்சியாக இருங்கள், எங்கள் மரணத்திற்கு எங்கள் கணவர்களின் குடும்பத்தினர் தான் காரணம். தினம் தினம் மரணிப்பதை விட ஒருமுறை மரணிப்பது சிறந்தது. ஆகையால், நாங்கள் இணைந்து சாக முடிவெடுத்துவிட்டோம், நாங்கள் மூவரும் அடுத்த வாழ்க்கையில் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம். நாங்கள் சாக விரும்பவில்லை ஆனால் எங்கள் கணவர்கள் குடும்பத்தினர் எங்களை துன்புறுத்துகின்றனர். எங்கள் மரணத்திற்கு எங்கள் பெற்றோரை குறை சொல்லாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.

வரதட்சனை கொடுமை காரணமாக சகோதரிகள் 3 பேர் இரு பச்சிளம் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட 3 சகோதரிகளின் கணவர்களையும், அவர்களது பெற்றோர், உறவினர்களையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்