வடகர்நாடகத்தில் கனமழை: மின்னல் தாக்கி 3 பேர் சாவு
வடகர்நாடகத்தில் பெய்த பலத்த மழைக்கு மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் தண்ணீரில் மூழ்கி பயிர்களும் சேதம் அடைந்திருந்தது.
பெங்களூரு:
மின்னல் தாக்கி சாவு
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பல்லாரி, விஜயநகர், ராய்ச்சூர், கலபுரகி, ஹாவேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து இருந்தது. குறிப்பாக பல்லாரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்திருந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் பெய்த மழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
பல்லாரி மாவட்டம் சிருகுப்பா தாலுகா உத்தனூரு கிராமத்தில் திருமண விழா நடைபெற்றிருந்தது. இதில், கிராமத்தை சேர்ந்த சேகர் கவுடா (வயது 32) மற்றும் பசவனகவுடா (38) உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். திருமண விழாவின் போது மழை பெய்ததால், சேகர்கவுடா, பசவனகவுடா ஒரு வீட்டின் அருகே ஒதுங்கி நின்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் சேகர்கவுடா மற்றும் பசவனகவுடா சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
வாழை மரங்கள் சாய்ந்தது
இதுபோல், ராய்ச்சூர் மாவட்டத்தில் பெய்த மழைக்கு, லிங்கசுகுர் தாலுகா பென்டோனி கிராமத்தில் தனது தோட்டத்தில் நின்று விவசாய பணிகளில் ஈடுபட்டு இருந்த நூர் அகமது (23) என்பவர் மின்னல் தாக்கி பலியாகி விட்டார். பல்லாரி மாவட்டம் கம்பிளி தாலுகாவில் ஆலங்கட்டி மழை மற்றும் சூறைக்காற்று வீசியதில் 61 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது.
மேலும் சில மாவட்டங்களில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தது. விஜயாப்புராவில் கொட்டி தீர்த்த மழைக்கு பபலேஷ்வரா தாலுகா கனமுஜநாலே கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு மாணவ, மாணவிகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுஇருந்தது.