உடுப்பியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை
உடுப்பியில் வெவ்வேறு சம்பவத்தில் முதியவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
உடுப்பி
முதியவர் தற்கொலை
உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா தேவல்குந்தா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டான்லி லூயிஸ் (வயது 74). இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட லூயிஸ் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து லூயிசின் மகன் தினேஷ் குந்தாபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல உடுப்பி மாவட்டம் மரவந்தே கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த தங்கும் விடுதியில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த படியப்பா பட்டீல் (40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
தொழிலாளி தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கும் விடுதியில் இருந்த ஒரு அறையில் படியப்பா பட்டீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த விடுதி ஊழியர்கள் கங்குலி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கங்குலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல உடுப்பி மாவட்டம் குந்தாபுரா டவுன் கேதூர் பள்ளி பகுதியில் சுதர்சன் (28) என்ற கூலி தொழிலாளி, ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குந்தாபுரா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரித்தனர். விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குந்தாபுரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.