குண்டர் சட்டத்தில் கைதான 3 பேருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை நீட்டிப்பு; கலெக்டர் உத்தரவு
சிவமொக்காவில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள 3 பேருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையை நீட்டித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
சிவமொக்கா;
பிரபல ரவுடி
சிவமொக்கா டவுன் திப்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீன் என்கிற பச்சன்(வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதேபோல் சிவமொக்கா டவுன் பகுதியில் வசித்து வரும் அபீத், சலீம்(36) ஆகியோர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களின் பெயர்களும் போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
இதில் பச்சன் மீது மட்டும் சிவமொக்கா, பெங்களூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 22 வழக்குகள் உள்ளன. அபீத் ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார்.
கலெக்டர் உத்தரவு
இவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி வரை சிறைவாசம் முடிவடைகிறது. இதற்கிடையே இவர்கள் 3 பேரையும் மேலும் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத், மாவட்ட கலெக்டர் செல்வமணிக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் இவர்கள் 3 பேருக்கும் மேலும் ஒரு ஆண்டு சிறைவாசத்தை நீட்டித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டு இருக்கிறார். அதனால் இவர்கள் 3 பேரும் மேலும் ஒரு ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.