உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி கங்கை ஆற்றில் விழுந்த கார் - 3 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவில் சிக்கிய கார் ஒன்று கங்கை ஆற்றில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
ரிஷிகேஷ்,
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவில் சிக்கிய கார் ஒன்று கங்கை ஆற்றில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
முன்னதாக கேதார்நாத்தில் இருந்து ரிஷிகேஷ் நோக்கி டிரைவர் உட்பட 11 பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கார் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முனி கி ரெட்டி பகுதிக்கு அருகில் வந்த போது நிலச்சரிவில் சிக்கியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சறுக்கி கங்கை ஆற்றில் விழுந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காரில் பயணம் செய்தவர்களில் 5 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் ரிஷிகேஷில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் டெல்லி, பீகார் மற்றும் ஐதராபாத் பகுதியில் வசிப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பேரிடர் மேலாண்மைத் துறைக்கும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளார். மேலும் மாநிலத்திற்கு வரும் யாத்ரீகர்கள் சமீபத்திய வானிலை தகவல்களைப் பெற்ற பின்னர் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.