3 துணை முதல்-மந்திரி விவகாரத்தை கட்சி மேலிடம் கவனிக்க வேண்டும்-பரமேஸ்வர் பேட்டி

3 துணை முதல்-மந்திரி விவகாரத்தை கட்சி மேலிடம் கவனிக்க வேண்டும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.;

Update: 2023-09-19 18:45 GMT

பெங்களூரு:-

கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசை ஆதரித்தனர்

அதிகாரம் கிடைக்குமெனில் நான் உள்பட யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். துணை முதல்-மந்திரி பதவி விஷயத்தில் எனது தனிப்பட்ட கருத்து ஒன்றும் இல்லை. எனக்கு அந்த பதவி வேண்டுமெனில் நானே கட்சியின் மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து கேட்பேன். சட்டசபை தேர்தலில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் லிங்காயத் சமூகத்தினர் காங்கிரசை ஆதரித்தனர்.

இந்த சமூகங்களுக்கு துணை முதல்-மந்திரி வழங்குமாறு மந்திரி கே.என்.ராஜண்ணா கேட்டு இருப்பதை நானும் ஆதரிக்கிறேன். எங்களது தனிப்பட்ட கருத்துக்கள் என்னவாக இருந்தாலும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. அதனால் தான் சித்தராமையா, கட்சி மேலிடம் அனுமதித்தால் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்குவதாக கூறியுள்ளார்.

பொறுப்பை வழங்கலாம்

அந்த சமூகங்களுக்கு பதவி வழங்கினால், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அந்த சமூக மக்கள் காங்கிரஸ் பக்கம் நிற்பார்கள் என்று கே.என்.ராஜண்ணா கூறியுள்ளார். இதனை கட்சி மேலிடம் கவனிக்க வேண்டும். துணை முதல்-மந்திரி பதவி வழங்க அந்தந்த சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கலாம். இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்