2-வது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியீடு

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Update: 2023-03-10 20:36 GMT

ஹாசன்:-

முற்றுப்புள்ளி வைக்கப்படும்

ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா சானேனஹள்ளி கிராமத்தில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திரை நடந்தது. யாத்திரையை கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் குதூகலமாக இருக்க நடவடிக்கை எடுப்பேன். மக்கள் எண்ணம்போல் அனைத்தும் நடக்கும்.

ஆலோசித்து முடிவு

தேர்தலையொட்டி ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதுபற்றி கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், கட்சியின் மூத்த தலைவர்

எச்.டி.ரேவண்ணா ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். ஹாசன் தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக சுவரூப் போட்டியிடுவார். இது கட்சியின் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசித்து எடுத்த முடிவு. இதில் மாற்றம் இருக்காது.

தேவேகவுடா குடும்பத்தை குறை கூறி வரும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, கர்நாடகத்துக்காகவும், ஹாசன் மாவட்ட மக்களுக்காகவும் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

கடனை ரத்து செய்தேன்

ஜோதி பசவா, வி.பி.சிங் ஆகியோர் பிரதமர் ஆனதை ஏற்றுக் கொண்ட பிரகலாத் ஜோஷியால் ஏன் தேவேகவுடா பிரதமர் ஆனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேவேகவுடாவுக்கு நாடு முழுவதும் 22 கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்ததை பிரகலாத் ஜோஷி மறந்து விடக்கூடாது. தேவேகவுடா பிரதமர் ஆனதில் எந்தவித சர்ச்சையும் இல்லை. வளர்ச்சிப் பணிகளை செய்திட போட்டிப் போட வேண்டுமே தவிர. அதிகாரத்தை பிடிப்பதற்காக அல்ல.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது விவசாய கடனை ரத்து செய்தேன். வேறு யாரும் அதை செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்