விராஜ்பேட்டையில் 27 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

விராஜ்பேட்டையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த 27 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Update: 2023-09-14 18:45 GMT

குடகு-

விராஜ்பேட்டையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த 27 காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் மால்தாரே மற்றும் சுற்றுவட்டார கிராமங்களையொட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி மால்தாரே, படகா பரங்காலா, துப்பனகொல்லி, ஹூந்தி, மைலாரா, மார்கொல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

அந்த காட்டு யானைகள் காபி உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசப்படுத்துவதுடன் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அந்த கிராமத்தையொட்டி உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள அந்தப்பகுதி மக்கள் தோட்டத்துக்கு செல்லவே பீதியில் உள்ளனர். மேலும், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் தீவிர முயற்சி

மேலும் அந்தப்பகுதி மக்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்ற வனத்துறையினரும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரி கோபால் உத்தரவின்பேரில் வனத்துறை அதிகாரி சீனிவாஸ், வன ஊழியர்கள் ரோஷன், தனு, சச்சின், குரு, சங்கர், பரத், சுந்தர் உள்பட 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படகா பரங்காலா பகுதியில் 27 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

பின்னர் வனத்துறையினர், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும், தீப்பந்தங்களை காண்பித்தும் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து அந்த காட்டு யானைகள் மார்கொல்லி, சவுடிகாடு, கட்டட்டல் வழியாக துபாரே வனப்பகுதிக்குள் சென்றன. ஒரு சில யானைகள் வழிமாறி சென்றாலும் அனைத்து யானைகளையும் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் வெற்றிகரமாக விரட்டியடித்தனர்.

இதனால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்