திருப்பதியில் ரூ.1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை
திருமலை திருப்பதியில் 2023ம் ஆண்டில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் திருப்பதி வந்து செல்கின்றனர். சில நிமிடங்கள் தரிசனத்திற்காக பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர் பக்தர்கள்.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம், ஆண்டு தோறும் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது. அதில் இந்த ஆண்டும், மாற்றம் இல்லை.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023-ம் ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
தொடர்ந்து 22-வது மாதமாக டிசம்பர் மாதத்திலும் ரூ.100 கோடியை உண்டியல் காணிக்கை வந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ரூ.129 கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.108 கோடியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். டிசம்பர் மாதத்தில் பக்தர்கள், காணிக்கையாக ரூ.116 கோடி செலுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 23ஆம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாகவே 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 23-ம்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் நாளை (திங்கட்கிழமை) இரவுடன் நிறைவு பெறுகிறது.