பத்ரா அணை அருகே 25 காட்டுயானைகள் அட்டகாசம்

பத்ரா அணை அருகே விளை நிலத்திற்குள் புகுந்து 25-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Update: 2023-06-14 18:45 GMT

சிக்கமகளூரு:-

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் பத்ரா அணை உள்ளது. இந்த அணை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. மேலும் இந்த அணை அருகே ஏராளமான விவசாய

நிலங்கள் உள்ளது. இதனால் காட்டுயானைகள் அடிக்கடி இரைதேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து, விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. காட்டுயானைகள் நடமாட்டத்தால் பீதியடைந்துள்ள கிராம மக்கள் நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் வனத்துறை தரப்பில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் காட்டுயானைகள் பத்ரா அணைப்பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. வெயில் நேரம் என்பதால் நேற்று முன்தினம் 25-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தண்ணீர் குடிப்பதற்காக பத்ரா அணைப்பகுதிக்கு வந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அப்போது அந்த யானைகள் அங்கிருந்து அருகே உள்ள விளை நிலத்திற்குள் சென்று விளை பயிர்களை நாசப்படுத்தியது. இதை பார்த்த விவசாய கூலி தொழிலாளர்கள்அந்த காட்டுயானைகளை அங்கிருந்து விரட்ட முயற்சித்தனர். ஆனால் அவைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து, அந்த யானைகளை அங்கிருந்து விரட்டினர். இருப்பினும் காட்டுயானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளை கிராம மக்களும், விவசாயிகளும் முற்றுகையிட்டனர். அவர்கள், 'காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்' என்று கூறினர். இதை கேட்டு வனத்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள், கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்