25 வீடுகள் இடிந்தன; 20 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தது

மைசூருவில் கனமழைக்கு 3 பேர் உயிரிழந்தனர். 25 வீடுகள் இடிந்து விழுந்தன. 20 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

Update: 2023-05-22 20:42 GMT

மைசூரு:-

பலத்த மழை

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடனும், சூறைக்காற்றுடனும் பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதேபோல், மைசூருவிலும் நேற்றுமுன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. அத்துடன் பயங்கர இடி-மின்னலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் மைசூரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

3 பேர் சாவு

உன்சூா் தாலுகா பிளிகெரே போலீஸ் எல்லைக்குட்பட்ட மண்டிகொப்பலு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஹரீஷ் (வயது 42) ேநற்று முன்தினம் தனது விளைநிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியதால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா அருகே ஆவர்த்தி கிராமத்தை சேர்ந்த விவசாயி லோகேஷ் (55) என்பவரும் தனது விளைநிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

மேலும், பெட்டதபுரா அருகே குடகூரு கிராமத்தை சேர்ந்த சுவாமி (18) என்பவர் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின்வயர் அறுந்து கீழே கிடந்தது. இதனை கவனிக்காமல் சுவாமி மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து பிளிகெரே, பெட்டதபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், மைசூரு அருகே அஞ்சியா கிராமத்தில் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து எருமை மாடு ஒன்றும் செத்துள்ளது.

20 ஏக்கரில் வாழை மரங்கள்

மேலும், உன்சூர் தாலுகாவில் சூறைக்காற்று மற்றும் கனமழையால் 25 வீடுகள் இடிந்துள்ளன. வீட்டின் மேற்கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலையின் நடுவே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கீரங்கூர் கிராமத்தில் பலத்த மழையால் 4 ஏக்கர் சோள தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

டி.நரசிப்புரா, எச்.டி.கோட்டை தாலுகாக்களில் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்