இந்தியாவில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் 3 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதல் மற்றும் 2-வது அலையில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஊரடங்கு மற்றும் தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
எனினும், சீனாவில் பரவி வரும் உருமாறிய வகை கொரோனாவால் அந்நாட்டில் தினசரி அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவித்து உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இதற்கான பரிசீலனையில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், கடந்த 24 மணிநேரத்தில் தொற்று எண்ணிக்கை முந்தின நாளை விட 44 உயர்ந்து உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்து உள்ளது.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 3,653 ஆக உயர்வடைந்து உள்ளது. கேரளாவில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 702 ஆக உள்ளது.