22 ஆயிரம் பேர் முன்பதிவு; சிக்கமகளூருவில் 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி
சிக்கமகளூருவில் வருகிற 17-ந் தேதி மாபெரும் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்று யோகா பயிற்சி செய்ய இதுவரை 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
யோகாத்தான் நிகழ்ச்சி
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி மாநில அரசு சார்பில் யோகாத்தான் எனப்படும் மாபெரும் யோகா நிகழ்ச்சி நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாறாக வருகிற 17-ந் தேதி அந்த நிகழ்ச்சியை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
நேற்று இந்த யோகாத்தான் நிகழ்ச்சி தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கலெக்டர் ரமேஷ், அதிகாரிகளிடம் யோகாத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிக்கமகளூருவில் வருகிற 17-ந் தேதி யோகாத்தான் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் மற்றும் பேலூர் சாைலயில் உள்ள ரெயில்வே ரோட்டில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இந்த இரண்டு இடங்களிலும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் யோகாத்தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்துள்ளனர்.
கின்னஸ் சாதனைக்கு முயற்சி
சிக்கமகளூரு கடூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 11 ஆயிரம் பேரும், பேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த யோகாத்தான் நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை படைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இந்த யோகாத்தானுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடிக்கவேண்டியது, அரசு அதிகாரிகளின் பொறுப்பு. அதை அவர்கள் துரிதமாக முடித்து கொடுக்கவேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தேவையான வாகன வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகளுக்கு எந்த குறைபாடும் இல்லாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.