திருப்பதி அருகே ரூ.21 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 8 பேர் கைது
திருப்பதி அருகே ரூ.21 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி பரமேஸ் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பாக்கிராபேட்டை போலீசார் பாக்கிராபேட்டை வனப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி அப்பகுதி வழியே வரக்கூடிய அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று கார்களை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் காரில் பயணம் செய்த தமிழக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எட்டு பேரை போலீசார் துரத்திப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று கார்கள், அரிவாள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. செம்மரக்கடத்தலில் முக்கிய நபரான தமிழகத்தைச் சேர்ந்த பாண்டி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாயுடு ஆகிய இரண்டு பேர் போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.