2024 மக்களவை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் திரை நட்சத்திரங்கள்

நடிகை லாக்கெட் சாட்டர்ஜி ஹூக்ளி தொகுதியில் இருந்தும், நடிகர் ரவி கிஷன் கோரக்பூர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

Update: 2024-03-02 14:22 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. அக்கட்சியின் பொது செயலாளர் வினோத் தாவடே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், 34 மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்-மந்திரிகள் இரண்டு பேரும் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலின்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்

அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களான மத்திய மந்திரி பதவிகளை வகித்து வருபவர்கள் வரிசையில் இடம் பெற்றவர்களான அமித்ஷா காந்திநகரில் இருந்தும், ராஜ்நாத் சிங் லக்னோவில் இருந்தும், மன்சுக் மாண்டவியா போர்பந்தர் தொகுதியில் இருந்தும், கிரண் ரிஜிஜூ அருணாசலம் மேற்கு தொகுதியில் இருந்தும், ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், முன்னாள் முதல்-மந்திரிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களான மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் இருந்தும், திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி பிப்லப் குமார் தேப் திரிபுரா மேற்கு தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில், புதிய வரவாக, காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த அனில் அந்தோணி பத்தனம்திட்டா தொகுதியில் இருந்தும், பன்சூரி ஸ்வராஜ் புதுடெல்லி தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர். அனில் அந்தோணி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணியின் மகன் ஆவார்.

இவை தவிர, இந்த பட்டியலில், திரை நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதன்படி, அமேதி தொகுதியில் இருந்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார். அவர் பிரபல தொலைக்காட்சி தொடரான ராமாயணத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர்.

இதேபோன்று, நடிகை ஹேமா மாலினி மதுரா தொகுதியில் இருந்து 3-வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். நடிகர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திரிச்சூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். நடிகை லாக்கெட் சாட்டர்ஜி ஹூக்ளி தொகுதியில் இருந்தும், நடிகர் ரவி கிஷன் கோரக்பூர் தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.

இவை தவிர, நடிகர் அக்சய் குமாருக்கு சாந்தினி சவுக் தொகுதியும், நடிகை கங்கனா ரணாவத்துக்கு மண்டி தொகுதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்