ஞானவாபி மசூதி வழக்கு: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வாரணாசி கோர்ட்டில் இன்று விசாரணை இல்லை
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் முடிந்தபின், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வாரணாசி கோர்ட்டில் நடைபெறும் என்று தெரிகிறது.
வாரணாசி,
உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற இருந்த நிலையில், வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வாரணாசி கோர்ட்டில் இன்று விசாரணை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கோர்ட்டு தரப்பு நியமிக்கப்பட்ட ஆணையாளரும் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில், முஸ்லிம் தரப்பினர் தங்கள் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய கோர்ட்டில் இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர்.
அதன்படி, ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய இரண்டு நாள் அவகாசம் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முஸ்லிம் தரப்புக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் அஜய் குமார் மிஸ்ராவை மீண்டும் ஆய்வுப்பணி மேற்கொள்ளும் குழுவின் கமிஷனராக நியமிக்க வேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே தகவல்களை வெளியே கசிய விட்டதாக, ஆய்வுப்பணி மேற்கொள்ளும் குழுவின் கமிஷனராக இருந்த அஜய் குமார் மிஸ்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், மனுதாரர் தனது மனுவில், அவரது ஆதரவு இல்லாமல் ஆய்வு அறிக்கை முழுமையடையாது என்று கூறியுள்ளார்.வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் முடிந்தபின், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வாரணாசி கோர்ட்டில் நடைபெறும் என்று தெரிகிறது.