கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பிளம்பர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை...!

திருபுவனை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பிளம்பர் உயிரிழந்து உள்ளார்;

Update: 2022-05-18 04:56 GMT
திருபுவனை,

புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 45). இவர் அப்பகுதியில் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரமா (39)  என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். 

ரமேஷ் இன்று காலை 7 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியின் பைப்புகளை மாற்ற சென்றுள்ளார். அப்பொழுது  தொட்டியின் உள்பகுதியில் குனிந்து வேலை செய்யும்போது தவறி உள்ளே விழுந்துள்ளார். 

இதைப்பார்த்த செந்தில் என்பவர் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். முடியாமல் போகவே திருபுவனை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை  தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இருந்து நீரை வெளியேற்றினர். அதன் பிறகு தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்த ரமேஷின் உடலை மீட்டு தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டுவந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்