காஷ்மீர்: புதிதாக திறந்த மதுபான கடை மீது பர்தா அணிந்து வந்த பயங்கரவாதி குண்டு வீச்சு - ஒருவர் பலி
பர்தா அணிந்து வந்த பயங்கரவாதி புதிதாக திறந்த மதுபான கடை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் கடை ஊழியர் உயிரிழந்தார்.;
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிவன் பக் பகுதியில் இன்று புதிதாக மதுபான கடை ஒன்று திறக்கப்பட்டது. அந்த கடையில் ஜம்முவை சேர்ந்த ரஞ்ஜித் சிங், கோவர்தன் சிங், கோவிந்த் சிங், ரவி குமார் உள்ளிட்டோர் பணியாற்றினர்.
அப்போது கடைக்கு பர்தா அணிந்து வந்த பயங்கரவாதி மதுபான கடையில் பணியாற்றிவந்த ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச்சென்றான். இந்த தாக்குதலில் கடையில் பணியாற்றிய 4 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ரஞ்சித் சிங் (52) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான அனைவரும் ஜம்முவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது லஷ்கர் பயங்கரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது. குண்டு வீச்சு தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.