இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளை தரக்குறைவாக கையாண்டது அம்பலம்; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தகாத முறையில் கையாண்டது எனத் தெரிவித்துள்ளது.;

Update: 2022-05-16 13:27 GMT
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி விமான நிலையத்தில், இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள், ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்த சம்பவம் கண்டனத்திற்கு உள்ளானது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து, இண்டிகோ வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புத் திறன் கொண்ட பயணிகள் இண்டிகோ நிறுவன விமானங்களில் பயணிக்கின்றனர். இண்டிகோ ஊழியர்களாக இருந்தாலும் சரி வாடிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாக இருப்பதில் இண்டிகோ பெருமை கொள்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ விமான நிறுவனம் அதன் பயணிகளை தகாத முறையில் கையாண்டது எனத் தெரிவித்துள்ளது.

விசாரணை கமிட்டியின் முதன்மையான முடிவுகளின்படி, இண்டிகோ நிறுவன ஊழியர்களால் பயணிகள் முறையற்ற முறையில் கையாளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விமான ஒழுங்குமுறை விதிமுறைகளுடன் சில இணக்கமின்மைகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.

குறைந்த கட்டண விமான சேவையளிக்கும் இண்டிகோவிற்கு, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்  (டிஜிசிஏ)  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமான நிறுவனம் விளக்கம் அளிக்க 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாதங்களை கேட்ட பின், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணையில், அன்று அந்த மாற்றுத்திறனாளி குழந்தை ஏற வந்த விமானத்தில் உடன் பயணித்த சக பயணிகள் மற்றும் விமானத்தில் செல்லும் மருத்துவர்களின் குழு எத்தனையோ முறையீடு செய்தும், இண்டிகோ ஊழியர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்