ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் அதானி மாநிலங்களவைக்கு போட்டியா? ஆந்திர அரசியலில் சலசலப்பு
இது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.
உள்நாடு மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர் அதானி. இவரது நிறுவனம் ஆந்திராவிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதனால் ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை அவர் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் அதானி அல்லது அவரது மனைவி பிரித்திக்கு ஓரிடம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இந்த தகவல் பொய் என அதானி தரப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.
அதில், ‘இது போன்ற யூகங்கள் அடிப்படையிலான செய்திகளில் நமது பெயரை இழுத்தடிக்கும் மலிவான நோக்குடையவர்களை பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது. கவுதம் அதானி அல்லது ப்ரித்தி அல்லது அதானி குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் அரசியலிலோ அல்லது எந்த அரசியல் கட்சியிலுமோ சேர விருப்பமில்லை’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.