ககன்யான் திட்டத்திற்கான ராக்கெட் பூஸ்டர் சோதனை வெற்றி- இஸ்ரோ
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்' திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள, ‘ராக்கெட் பூஸ்டர்' கருவியை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
இஸ்ரோவின் ககன்யான் திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையில், ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். அதன்படி ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. அதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் பூஸ்டரை இஸ்ரோ வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது.
பூஸ்டர் சோதனை வெற்றி
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படும் பூஸ்டர் சோதிக்கப்பட்டது. இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலருமான சோம்நாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
குறிப்பாக, 203 டன் திட உந்துசக்தியுடன் ஏற்றப்பட்ட எச்.எஸ்.200 பூஸ்டர் 135 வினாடிகளுக்கு சோதிக்கப்பட்டது. 20 மீட்டர் நீளம் மற்றும் 3.2 மீட்டர் விட்டம் கொண்ட பூஸ்டர் திட உந்துசக்தியுடன் கூடிய உலகின் 2-வது பெரிய செயல்பாட்டு பூஸ்டர் ஆகும். இந்த சோதனையின் போது, சுமார் 700 அளவுகோல்கள் கண்காணிக்கப்பட்டன. மற்றும் அனைத்து அமைப்புகளின் செயல்திறன் சாதாரணமாக இருந்தது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததன் மூலம், ககன்யான் திட்டத்திற்கு இஸ்ரோ இன்னும் ஒரு படி நெருங்கி வருகிறது. இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க அறிவியல் முயற்சியான ககன்யான் திட்டம், ஒரு இந்தியரை விண்வெளிக்கு அழைத்துச் சென்று அவரைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டுவரும் அதன் இறுதி இலக்கை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.