சரத்பவார் குறித்த நடிகையின் முகநூல் பதிவு துரதிருஷ்டவசமானது- அஜித்பவார் கருத்து
சரத்பவார் குறித்த நடிகையின் முகநூல் பதிவு துரதிருஷ்டவசமானது என அஜித்பவார் கூறியுள்ளார்.;
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் குறித்து மராத்தி நடிகை கேதகி சிதாலே முகநூலில் அவதூறு கருத்தை பதிவேற்றி இருந்தார். அவரது பதிவில், ' நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்', ' நரகம் காத்து கொண்டு இருக்கிறது.' போன்ற கருத்துக்கள் இடம் பெற்று இருந்தன. இந்த முகநூல் பதிவு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கேதகி சிதாலேயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியதாவது:- இது மராட்டியத்தின் துரதிருஷ்டம். அரசியல் அமைப்பு மக்களுக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. ஆனால் மக்கள் நாம் என்ன பேசுகிறோம், அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மனதில் வைக்க வேண்டும்.
சரத்பவார் 60 ஆண்டுகளாக பொது வாழக்கையில் உள்ளார். தன் மீது பல விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் ஒருபோதும் நியாமற்ற கருத்துகளை கூறியது இல்லை. சரத்பவார் மீதான நடிகையின் பதிவு துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.