பாகிஸ்தான் கும்பலுடன் இணைந்து ஐ.பி.எல் சூதாட்டம்; ஐதராபாத்தை சேர்ந்த மூவர் கைது! சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சூதாட்ட கும்பல், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகின் அதிக பணம் கொட்டும் பிரபலமான உள்நாட்டு தொடராக ஐபிஎல் தொடர் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீண்டும் சூதாட்ட புகார்கள் சூடுபிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மேட்ச் ஃபிக்சிங் மற்றும் சூதாட்ட புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு சூதாட்ட கும்பல் மீது சிபிஐ இரண்டு எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சூதாட்ட கும்பல், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இந்த சூதாட்டம் 2019 இல் நடைபெற்ற போட்டிகளை பாதித்துள்ளது என தெரியவந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் தனிநபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை செய்ய பாகிஸ்தானில் இருந்து ஐடியாக்கள் வந்திருப்பது, அதனை இந்தியாவில் இருந்து செயல்படுத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த கும்பல் சூதாட்டம் மூலம் பணம் ஈட்டி, அதனை வங்கி கணக்குகள் மூலம் அயல்நாட்டிற்கு அனுப்பி வந்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து வங்கி கணக்கு உருவாக்கியுள்ளனர்.
இதற்காக சில நபர்கள், தெரியாத வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, போலி ஐடிகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளனர். போலியான விவரங்களைச் சமர்ப்பித்து இந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பந்தயம் கட்டுவதற்காக பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ள சில நபர்கள் ஐபிஎல் போட்டிகளின் முடிவில் செல்வாக்கு செலுத்துகின்றனர். இந்தியாவில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் பணம், ஹவாலா பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள அவர்களது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
டெல்லியைச் சேர்ந்த திலீப் குமார் மற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் வாசு மற்றும் குர்ரம் சதீஷ் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சிபிஐ எப்ஐஆரில் பட்டியலிட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.