சத்தீஷ்காரில் அரசு ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலி
சத்தீஷ்காரில் அரசு ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த 2 விமானிகள் பலியாகினர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் ஒரு அரசு ஹெலிகாப்டர் நேற்று இரவு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது.
அப்போது ஏற்பட்ட விபத்தில் ஹெலிகாப்டரின் 2 விமானிகளும் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தனது டுவிட்டரில், “ராய்பூரில் உள்ள விமான நிலையத்தில் மாநில ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில், எங்கள் விமானிகள் கேப்டன் பாண்டா மற்றும் கேப்டன் ஸ்ரீவஸ்தவா இருவரும் உயிரிழந்தனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் பலத்தையும், இறந்த ஆன்மா சாந்தியையும் தரட்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.