ஆசிட் வீச்சில் கைது; 17 ஆண்டுகளுக்கு பின் பெண்ணை தேடி பாலியல் வன்கொடுமை செய்த நபர்
ஆசிட் வீச்சில் சிறை சென்று விடுதலையான நபர் 17 ஆண்டுகளுக்கு பின் அதே பெண்ணை தேடி சென்று, மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.;
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் கபில் குப்தா என்ற ஆஷிஷ் (வயது 42). பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இவரை கர்நாடகாவில் 2,200 கி.மீ. தொலைவுக்கு தேடி சென்று டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
கபில் குப்தா கடந்த 2005ம் ஆண்டு பெண் ஒருவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பின் கபில் விடுதலையானார். வெளியே வந்த பின்னர், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை கான்பூரில் உள்ள தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, விசாரித்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதன்பின்பு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், டெல்லியில் வசிக்கும் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவேன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன்பின் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தொடர்ந்து அதனை படம் பிடித்தும் வைத்து கொண்டார். சமூக ஊடகங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார். இதனால், 3 மாதங்களாக அந்த பெண் போலீசிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் தொடர்ந்து மிரட்டி, மற்றொரு முறையும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தைரியம் வரவழைத்து கொண்டு அந்த பெண் டெல்லி சுல்தான்புரி காவல் நிலையத்தில் மேற்கண்ட புகாரை அளித்துள்ளார். இதுபற்றி கடந்த மார்ச்சில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கபிலை தேடி வந்துள்ளனர்.
இதற்காக அமைக்கப்பட்ட டி.சி.பி. சமீர் சர்மா தலைமையில், ஆய்வாளர் அஜ்மீர் சிங், துணை ஆய்வாளர் ராகேஷ் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு தனி படை டெல்லியில் தேடி, அலைந்தும் அந்த நபர் கிடைக்கவில்லை.
கான்பூரிலும் காணவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்த நிலையில், கபிலை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன்பின்னர் இறுதியாக, கண்காணிப்பு கேமிரா உதவியுடன் பெங்களூருவில் வைத்து கடந்த வாரம் கபில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆசிட் வீச்சு சம்பவத்திற்கு முன் அல்லது பின்னர் வேறு குற்ற சம்பவங்களில் கபில் ஈடுபட்டாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.