டெல்லியில் நாளை முதல் மீண்டும் வெப்ப அலை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டெல்லியில் நாளை முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 - 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வாட்டி வதைத்தது. இந்தநிலையில், டெல்லியில் நாளை முதல் வரும் 15 ஆம் தேதி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், நாளைய (புதன்கிழமை) வெப்ப நிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது. நேற்று, டெல்லியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது நடப்பு ஆண்டில் இயல்பான வெப்ப அளவை விட ஒரு டிகிரி அதிகம் ஆகும்.