பஞ்சாப் காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்
பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப்பிரிவு தலைமை அலுவலகத்தில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மொஹாலி,
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் அம்மாநில காவல்துறையின் உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் காணப்படும். இந்த நிலையில், நேற்று இரவு 7.45 மணியளவில் இந்த அலுவலகத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அலுவலகம் அமைந்துள்ள தெருவில் இருந்து ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளது. அலுவலகத்தின் ஜன்னல் மீது விழுந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின. அப்பகுதியை அதிரவைத்த இந்த சம்பவத்தையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தடயவியல் குழுவினர் நேரில் வந்து ஆய்வு விசரணை நடத்தி வருகின்றனர்.
உளவுப்பிரிவு தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிறிய ரக வெடித்தாக்குதல் இது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர். தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.