சமஸ்கிருத கல்வி மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் - மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான்
சமஸ்கிருதத்தின் தோற்றம், நவீனம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஆதாரம் தேவையில்லை.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘கர்ஷ் மஹோத்சவ்’ புதுடெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தால் மே 7 முதல் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் 17 சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அறிஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரியும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆக உள்ள தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், “சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. தேசிய கல்விக் கொள்கையின்படி, சமஸ்கிருதம் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு இந்திய மொழிகளை ஒன்றிணைப்பதில் சமஸ்கிருதம் பெரும் பங்காற்றியுள்ளது.
சமஸ்கிருதத்தின் தோற்றம், நவீனம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஆதாரம் தேவையில்லை.சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் பெரிய பல்துறை உயர்கல்வி நிறுவனங்களாக மாறும்.நமது அறிவும் ஞானமும் நமது செல்வம். பல நூற்றாண்டுகளாக நமது நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு நம் அனைவரின் மீதும் உள்ளது” என்றார்.