எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் முன்னுரிமை- ராஜ்நாத் சிங்
எல்லை சாலை அமைப்புக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எல்லைப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகளை உறுதி செய்வதே அரசின் விரிவான பாதுகாப்பு வியூகங்களில் முக்கிய பகுதி எனக்கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நமது பாதுகாப்புக்காக இரவும் பகலும் உழைக்கும் இந்த நாட்டின் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு அதிகபட்ச வசதிகளை செய்து தருவதே அரசின் முன்னுரிமை ஆகும்’ என தெரிவித்தார்.
எல்லை பிராந்தியங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதற்காக எல்லை சாலை அமைப்புக்குழுவை பாராட்டிய ராஜ்நாத் சிங், இதனால் வடகிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டின் வளர்ச்சிக்கான புதிய நுழைவாயிலாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மனித நாகரிகப் பயணத்தில் சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், உணவு வழங்கல், ராணுவ தேவைகள், தொழில்துறை, சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான பிற பணிகளை எட்டுவதற்கு சாலைகள் மற்றும் பாலங்களின் பங்கு முக்கியமாகும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.