“சமஸ்கிருதத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” - ஜே.பி.நட்டா
அறிவியல், கணிதம் மற்றும் தத்துவத்திற்குமான வேர் சமஸ்கிருதத்தில் உள்ளது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் சார்பில், டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ‘உத்கர்ஷ் மகோத்சவ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சமஸ்கிருதம் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் மொழி என்று குறிப்பிட்டார். மேலும் சமஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது சமூகத்தில் பல்வேறு நவீன முன்னேற்றங்களை அடைவதற்கான பாதை என்று அவர் கூறினார்.
அறிவியல், கணிதம் மற்றும் தத்துவம் என அனைத்திற்குமான வேர் சமஸ்கிருதத்தில் உள்ளது என்று தெரிவித்த அவர், சமஸ்கிருத மொழி நமது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டார். மேலும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தும் சமூகம் ஒரு நாகரீகமான சமூகமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய கலாச்சாரத்தை காப்பதற்காக உழைப்பவர்களை என்றும் ஆதரிக்கும் அரசாக இருக்கும் என்று கூறிய அவர், சமஸ்கிருதத்தை காப்பதற்காகவும், அதனை மேம்படுத்துவதற்காகவும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.