தாயிடம் மன்னிப்பு கோரும் ராணுவ அதிகாரியாக பள்ளி மாணவர் எழுதிய கற்பனை குறிப்புகள்...
டெல்லி அரசு பள்ளி மாணவர் எழுதிய கடித குறிப்புகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
புதுடெல்லி,
டெல்லி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மனு குலாதி. இவர் தனது மாணவ, மாணவியர்களிடம் வீட்டு பாடம் ஒன்றை எழுதி வரும்படி கூறியுள்ளார். இதன்படி, அவர்கள் ஏதேனும் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து கொண்டு, அதற்கு வருத்தம் தெரிவித்து குறிப்பு எழுத வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு வருத்த குறிப்பினை எழுதி வந்துள்ளனர். அதில் ஒரு மாணவர் எழுதிய விசயங்கள் குலாதியின் மனம் தொடும் வகையில் அமைந்தன. அதனை அவர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
குலாதி வெளியிட்ட தகவலில், மாணவர்கள் தங்களுடைய எண்ணங்களால் சில சமயங்களில் உங்களை ஆச்சரியப்படுத்தி விடுகிறார்கள்.
நான் மாணவர்களிடம், ஏதேனும் ஒரு சூழ்நிலையை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் வருத்தம் தெரிவிக்கும் வகையில் குறிப்பு ஒன்றினை எழுதி வாருங்கள் என கேட்டு கொண்டேன்.
அதற்கு ஒரு மாணவர் என்ன எழுதியுள்ளார் என படியுங்கள். அந்த மாணவர் தன்னை ராணுவ அதிகாரியாக கற்பனை செய்து கொண்டான்.
எனது பணியே என்னுடைய முன்னுரிமை. ராணுவ பணியாளர்களுக்கு வணக்கங்கள் என தலைப்பிட்டு தொடங்கியுள்ளார் என தெரிவித்து உள்ளார்.
அந்த குறிப்பில், ராணுவ அதிகாரியின் தாயார் அந்த அதிகாரியிடம், 4 நாட்களில் உனது சகோதரியின் திருமணம் நடைபெற உள்ளது. திருமண நிகழ்வில் கலந்து கொள்ள நீ வரவேண்டும் என கூறுகிறார்.
அதற்கு அந்த அதிகாரி, மன்னிக்க வேண்டும். என்னால் வர முடியாது. ஏனென்றால், நம்முடைய நாட்டின் எல்லை பகுதி தற்போது ஆபத்தில் உள்ளது. அதனால், என்னால் விடுமுறை பெற முடியாது.
ஏனெனில் நம்முடைய எல்லை பகுதி இன்னும் ஆபத்திலேயே உள்ளது. நான் வர முடியாது என்பதற்காக, தாயே அதிக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
திருமண நிகழ்ச்சியையும் என்னால் பார்க்க முடியாது. எனது சகோதரியை எப்போது பார்ப்பேன் என்றும் எனக்கு தெரியாது. தற்போது எனது பணியே என்னுடைய முன்னுரிமை தாயே. என்னால் திருமணத்திற்கு வர இயலாததற்காக என்னை தயவுகூர்ந்து மன்னியுங்கள் என்று மாணவர் எழுதியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றும்போது, தங்களது குடும்பத்தினரை விட்டு பிரிந்து பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் கடும் பனி, குளிர் போன்ற சூழல்களுக்கு இடையே, எதிரிகளை எதிர்கொள்ளும் துணிவுடன் வீரர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்திடுவார்கள்.
அவர்களுக்கு நினைத்த நேரத்தில் விடுமுறை கிடைப்பது கடினம். இதுபோன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத ராணுவ அதிகாரியின் வருத்தம் பற்றிய குறிப்பினை எழுதிய அந்த மாணவருக்கு நெட்டிசன்கள் பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.