விசாரணைக்கு என அழைத்து சென்று பழங்குடியின பெண் பலாத்காரம்; சப்-இன்ஸ்பெக்டர் கைது
இரவில் அந்த இளம்பெண் ஒரு திருமண விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு வந்த பிரசாத், இளம்பெண்ணை வெளியே வரவழைத்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
கோட்டா,
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம், பால்டா போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜக்திஸ் பிரசாத் (வயது59). இவர் கடந்த ஜனவரியில் இருந்து ஒரு வழக்கு சம்பந்தமாக 25 வயதுடைய பழங்குடியின பெண்ணை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவில் அந்த இளம்பெண் ஒரு திருமண விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு வந்த பிரசாத், இளம்பெண்ணை வெளியே வரவழைத்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதிக்கு சென்றதும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மீண்டும் திருமண விழா நடந்த இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து இளம்பெண் தனது கணவரிடம் கூறி கண்ணீர்விட்டுள்ளார். அவர் போலீசில் புகார் அளிக்க, பிரசாத் பணி செய்த அதே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமையன்று இளம் பெண், நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.