ராஜஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களை காண ராகுல் காந்தி நேபாளத்திலிருந்து விரைவில் திரும்ப வேண்டும் - பாஜக

ராகுல் காந்தியும் பிரியங்காவும் ஜோத்பூர் சென்று வன்முறை சம்பவங்களை காண வேண்டும்.;

Update: 2022-05-05 12:05 GMT
புதுடெல்லி,

ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மதம் சார்ந்த கொடிகளை ஏற்றிய நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது.  

இதனை தொடர்ந்து நடந்த கல்வீச்சு தாக்குதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.தொடர்ந்து சமூக வலை தளங்களில் வதந்திகள் பரவியதன் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

இந்த உத்தரவை நாளை வரை (மே 6) நீட்டித்து மாவட்ட காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார். மக்கள் அமைதியையும், நல்லிணக்கமும் காக்க வேண்டும் என முதல்-மந்திரி கேட்டு கொண்டார்.  

இந்த நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளரும் ராஜஸ்தானின் பாஜக மாநில பொறுப்பாளருமான அருண் சிங்  ராகுல் காந்தி மீது விமர்சனம் முன்வைத்தார்.

சமீபத்தில் நேபாளத்தில் இரவு விடுதியில் காணப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜோத்பூரை பார்வையிட வருமாறு பாஜக மாநில பொறுப்பாளர் அருண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் பேசியதாவது, “ராஜஸ்தானில் இந்துத்துவா மற்றும் இந்துவாடியை பற்றி ராகுல் காந்தி வரையறுத்திருந்தார். அவரும், பிரியங்கா காந்தியும் மாநிலத்திற்குச் சென்று வன்முறைச் சம்பவங்களைக் காண வேண்டும்.

சமாதான அரசியலில் ஈடுபடாமல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்த வேண்டும்.

நேபாளத்திலிருந்து விரைவில் திரும்பி ராஜஸ்தானுக்குச் செல்லுமாறு ராகுல் காந்தியை நான் வலியுறுத்துவேன். ராகுல் காந்தி ராஜஸ்தான் சென்று நிலைமையை ஆய்வு செய்து, முதல் மந்திரி உள்பட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்  என்பதை வலியுறுத்துகிறேன்.

ஜோத்பூரில் நடந்த வன்முறைக்கு ராஜஸ்தான் அரசு தான் காரணம். ராஜஸ்தானில் அமைதிக்காக நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட உள்ளனர்."

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாள நாட்டில் இரவு விடுதி ஒன்றில் பங்கேற்ற திருமண விருந்து நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராகுல்காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. திருமண விருந்தில் பங்கேற்பது தவறா? என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்