டெல்லியில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவிகளிடம் பாலியல் சீண்டல்
டெல்லியில் ஒரு பள்ளிக்குள் வெளிநபர் ஒருவர் திடீரென புகுந்து 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி பஜன்புரா பகுதியில் கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயில்கின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த மாதம் 30-ந்தேதி காலை பிரார்த்தனை முடிந்தபின் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென வெளிநபர் ஒருவர் அந்த வகுப்பறைக்குள் புகுந்தார்.
ஒரு மாணவியிடம் சென்ற அந்த ஆசாமி, அவரின் ஆடைகளை களைந்தார். பின்னர் அந்த மாணவியிடம் ஆபாச வார்த்தைகள் பேசினார். பின்னர் அடுத்து ஒரு மாணவியின் ஆடைகளைக் களைந்ததுடன், தனது ஆடைகளையும் அகற்றினார். பின்னர் அந்த நபர் வகுப்பறையின் கதவுகளை மூடிவிட்டு வகுப்பறைக்குள் மாணவர்கள் முன் சிறுநீர் கழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடமும், வகுப்பாசிரியரிடமும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்களோ இதுகுறித்து வெளியே சொல்லாமல், மறந்துவிடுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் பற்றி அறிந்து இதை கையில் எடுத்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், இதுதொடர்பாக டெல்லி போலீசுக்கும், கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தீவிரமான இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட நபரை கைது செய்ய தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது.
அதேநேரம், பாதிக்கப்பட்ட மாணவிகள், குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள மகளிர் ஆணையம், பள்ளி தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் மீதும் ‘போக்சோ’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் துறை நாளைக்குள் அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையம் கூறியுள்ளது. இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.