கட்சிக்கு எதிரான தனியார் நிறுவனம் சார்பில் ப.சிதம்பரம் ஆஜரானதற்கு காங்கிரஸ் வக்கீல்கள் எதிர்ப்பு..!
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ப.சிதம்பரம் ஆஜரானதற்கு காங்கிரஸ் வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள அரசு, தனக்கு சொந்தமான மெட்ரோ பால்பண்ணையின் பங்குகளை கெவென்டீர் என்ற தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது. இதை எதிர்த்து மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெவென்டீர் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மூத்த வக்கீலுமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். பின்னர் அவர் கோர்ட்டை விட்டு வெளியேறியபோது, அவர் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆஜரானதற்கு காங்கிரஸ் வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர்களில் கவுஸ்தவ் பக்சி என்ற வக்கீல் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் உணர்வுகளுடன் ப.சிதம்பரம் விளையாடி வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் நடத்தி வரும் வழக்கில், அவருக்கு எதிரான தனியார் நிறுவனம் சார்பில் அவர் ஆஜராவது முறையல்ல. காங்கிரஸ் நலனுக்கு எதிராக எந்த தலைவர் செயல்பட்டாலும் இதேபோல்தான் நடந்திருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டம் குறித்து கேட்டதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இது காங்கிரசாரின் இயற்கையான எதிர்வினை. அதே சமயத்தில், தொழில் அடிப்படையில் ஒருவர் செய்யும் செயலை யாரும் விமர்சிக்க முடியாது" என்று கூறினார்.