மின் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தனியார் மின் நிலையங்கள் மூடப்பட்டு இருப்பது ஏன்? மத்திய அரசுக்கு என்ஜினீயர்கள் கூட்டமைப்பு கேள்வி

மின் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தனியார் மின் நிலையங்கள் ஏன் மூடப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசிடம் என்ஜினீயர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-05-04 21:07 GMT
கோப்புப் படம்
லக்னோ,

நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவும் இந்த சூழலில் தனியார் மின் நிலையங்கள் மூடப்பட்டு இருப்பது ஏன்? என மத்திய அரசை என்ஜினீயர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது. அனல் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மின்வெட்டு நீடிக்கிறது.

இந்த நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் தனியார் நிறுவனங்களை மத்திய அரசு விட்டு வைத்திருப்பது குறித்து அகில இந்திய மின் என்ஜினீயர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய மின்சார நெருக்கடிக்கு நிலக்கரி இறக்குமதிதான் தீர்வு என்றால், இறக்குமதி நிலக்கரியிலேயே இயங்கி வரும் தனியார் மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பது ஏன்?

மாநிலங்கள் நிலக்கரியை இறக்குமதி செய்யுமாறு மத்திய மின்சார அமைச்சகம் ஒருபுறம் அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் மறுபுறம் முந்திராவில் உள்ள அதானியின் 4,600 மெகாவாட் மின் நிலையம், டாட்டாவின் 4,000 மெகாவாட் மின் நிலையம், உடுப்பியில் உள்ள அதானியின் 1,200 மெகாவாட் மின் நிலையம் ஆகியவற்றுக்கு எந்த அறிவுறுத்தலும் இல்லை.

கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த மின்நிலையங்கள் எளிதில் இறக்குமதி நிலக்கரியை கொண்டு செல்ல முடியும். ஆனால் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்ததுடன், இந்த நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட பின்னரும், மின் நிலையங்களை நிலக்கரி சென்றடையவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நிலக்கரி இறக்குமதி செய்தால் கூட, போதுமான ரெயில் பெட்டிகள் இல்லாமல் அவற்றை எப்படி மின்நிலையத்துக்கு கொண்டு சேர்க்க முடியும்? உள்நாட்டில் உற்பத்தியாகும் நிலக்கரியை அனல் மின்நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யும் வரை, இறக்குமதி நிலக்கரியை துறைமுகங்களில் இருந்து மேற்படி நிலையங்களுக்கு எவ்வாறு கொண்டு செல்வது என மின்சார அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ரெயில்வேயின் திறந்த ரெயில் பெட்டிகளில் 83 சதவீத பெட்டிகள் நிலக்கரி கொண்டு செல்ல பயன்படுத்தப்படுவதாக ரெயில்வே கூறியுள்ளது. மொத்தமுள்ள 1,31,403 பெட்டிகளில் 1,13,880 பெட்டிகள் நிலக்கரி போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுவதாகவும், 3,636 பெட்டிகள் பழுது நீக்க வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்