உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான ராகுல்காந்தி சந்திப்புக்கு அனுமதி மறுப்பு சந்திரசேகர ராவ் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ந் தேதி மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ந் தேதி மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக காங்கிரசின் மாணவர் சங்கம், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மனு அளித்தது. ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது என்று ஓராண்டுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும், சில தேர்வுகள் நடந்து வருவதாலும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரசின் மாணவர் சங்கத்தினர், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் மீது கற்களை வீசி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நெருக்கடி கொடுத்ததால்தான், பல்கலைக்கழகம் அனுமதி மறுத்து விட்டதாக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர் காங்கிரசாரை ராகுல்காந்தி 7-ந் தேதி சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.