வெப்பம் இயல்பை விட அதிகரிக்கும்... கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: மத்திய அரசு
வெப்பநிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் இதுவரை இல்லாத அளவு வெப்ப அலை வீசி வருவதால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதிய வேளைகளில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்கள், டெல்லி, ஒடிசா போன்ற பகுதிகள் வெப்ப அலை கடுமையாக வீசுகிறது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. மேலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கு தெரிவித்துள்ளார்.