பட்டப்பகலில் தனி ஆளாக வங்கியில் இருந்த காசாளரை மிரட்டி ரூ.3.30 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்!

அந்த நபர், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காசாளரை மிரட்டி கவுண்ட்டரில் இருக்கும் பணத்தை எடுத்து தனது பையில் வைக்குமாறு மிரட்டி இருக்கிறார்.

Update: 2022-05-01 13:12 GMT
கோப்புப்படம்
விசாகப்பட்டினம்,

ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டம் நரசிங்கிபில்லி பகுதியில் ‘ஆந்திரபிரதேச கிராம விகாஷ் வங்கி’ இயங்கி வருகிறது. 

நேற்று மதியம் 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தலையில் ஹெல்மட் அணிந்தபடி அந்த வங்கிக்குள் நுழைந்தார். நேரடியாக காசாளர் இருக்கும் பகுதிக்கு விரைந்த அந்த நபர், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காசாளரை மிரட்டி கவுண்ட்டரில் இருக்கும் பணத்தை எடுத்து தனது பையில் வைக்குமாறு மிரட்டி இருக்கிறார். துப்பாக்கி முனையில் இருந்ததால், கவுண்ட்டரில் இருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை மர்ம நபரின் பையில் காசாளர் வைத்து இருக்கிறார். 

மதிய வேளை என்பதால், வங்கியில் உள்ள மற்ற ஊழியர்கள் உணவு இடைவெளிக்கு சென்று இருந்தனர். மேலும் வாடிக்கையாளர்களும் இல்லை. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன், காசாளரை மிரட்டி பணத்தை பறித்து இருக்கிறான். 

மேலும் கொள்ளையன் இந்தி மொழியில் பேசி இருக்கிறான். தொடர்ந்து லாக்கர் அறையில் உள்ள பணத்தை எடுக்குமாறு காசாளரை மிரட்டி இருக்கிறான். எனினும், பொதுமக்கள் வரத் தொடங்கியதை அடுத்து, கையில் கிடைத்த பணத்துடன் கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறான். 

கொள்ளை சம்பவத்தை அடுத்து வங்கிக்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். காசிம்கோட்டா மற்றும் அனகாபள்ளி பகுதி முழுக்க அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

கொள்ளை சம்பவத்தை அடுத்து, தடயவியல் நிபுணர்களும் வங்கியில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர கொள்ளையனை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்

மேலும் செய்திகள்