ஆண்மை குறைவு தேநீர் விற்பனை; சர்ச்சையாக பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. கைது

கேரளாவில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், வகுப்புவாத மோதல்களை தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-05-01 05:47 GMT

திருவனந்தபுரம்,



கேரளாவின் பூஞ்சார் தொகுதியின் முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ்.  கடந்த வெள்ளி கிழமை அனந்தபுரி இந்து மகா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்போது, முஸ்லிம்கள் நடத்தும் உணவு விடுதிகளில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் வகையிலான பொருட்கள் தடவிய தேநீர் விற்பனை செய்யப்படுகிறது.  நாட்டை கைப்பற்றி கட்டுப்படுத்தும் முயற்சியாக இது நடைபெறுகிறது என கூறினார்.  பரபரப்பு ஏற்படுத்தி உள்ள அவரது பேச்சால் கேரளாவில் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜார்ஜுக்கு எதிராக கேரள போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை நந்தவனம் பகுதியில் உள்ள ஏ.ஆர். கேம்ப் என்ற இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையிலான அவரது பேச்சால் திருவனந்தபுரம் நகரின் கோட்டை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து 153ஏ பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல் உள்பட) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.சி. ஜார்ஜ் கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முல்லக்கால் மீது கடந்த 2018ம் ஆண்டு பரபரப்பு புகார் கூறினார்.  அதில், தன்னை 13 முறை பாதிரியார் கற்பழித்து உள்ளார் என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், பாதிரியார் பிராங்கோ மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை விபசாரி என ஜார்ஜ் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.  அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அந்த கன்னியாஸ்திரி விபசாரி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? 12 முறை அவருக்கு சுகம் ஆக இருந்துள்ளது.  13வது முறை அது கற்பழிப்பு ஆகியுள்ளது? 12 முறை நடந்தபொழுது அவர் எங்கே இருந்தார்? யாருக்காக இதனை அவர் கூறுகிறார்? முதல்முறை கற்பழிப்பு நடந்தபொழுது அவர் ஏன் புகார் அளிக்கவில்லை? என அடுக்கடுக்கான கேள்வி கேட்டுள்ளார்.

இதேபோன்று, கடந்த 2017ம் ஆண்டு கேரள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு காரில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஜார்ஜுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.



மேலும் செய்திகள்