வெப்ப அலையின் தாக்கம்: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்
வெப்ப அலையின் தாக்கத்தால் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக, ஒடிசா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
புவனேஸ்வர்,
இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் இந்த வெப்ப அலையால் பல்வேறு வட மாநிலங்களுக்கு மஞ்சள்ள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக, ஒடிசா மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வருகின்ற மே 2 ஆம் தேதி(திங்கள்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும், அதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும் ஒடிசா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.