பெட்ரோல்,டீசல் மீதான வரி 250 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி விமர்சனம்
கடந்த 2014-15 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரி 250 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்துள்ளது. கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயராவிட்டாலும் அதற்கு முந்தைய நாட்களில் தினம் தினம் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்தது.
பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்ததையடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்தது. இதைப் பின்பற்றி பாஜக ஆளும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தன. எனினும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வரி குறைக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளதாக விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2014-15 முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரி 250 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, ‘ 2014- ஆம் ஆண்டு, வரி முறையே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ரூ.9.48, ரூ.3.56 ஆக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியான ஊடகச் செய்தி ஒன்றையும் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் டேக் செய்துள்ளார்.