அரசு பணி நியமன முறைகேடுகள் வட கர்நாடக இளைஞர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் - மல்லிகார்ஜுன கார்கே ஆதங்கம்
அரசு பணி நியமன முறைகேடுகள் வட கர்நாடக இளைஞர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கலபுரகி,
மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசார் தவறு செய்ததாக கூறி சில மணி நேரங்களில் போலீசார் அவர்களை கைது செய்தனர். ஆனால் முறைகேடுகளில் தொடர்புடைய முக்கிய நபரான பா.ஜனதாவை சேர்ந்த பெண் ஒருவரை இதுவரை கைது செய்யவில்லை. என் வீட்டில் வேண்டுமானாலும் போலீசார் வந்து விசாரணை நடத்தட்டும். ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. விசாரணையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையே மேற்பார்வையிட வேண்டும்.
இதுபோன்ற அரசு பணி முறைகேடுகள் வட கர்நாடக இளைஞர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நல்லாட்சி நடைபெற்றால் வளர்ச்சி ஏற்படும். நேர்மையான அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். நான் போலீஸ் மந்திரியாக பணியாற்றியபோது, முறைகேடுகளை தடுக்க ஒருவருக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே வழங்க அனுமதி வழங்கும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
நேர்க்காணலில் 7 பேர் இருந்தால் ஒருவருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனால் முறைகேடுகள் பெருமளவில் தடுக்கப்பட்டன. அந்த முறை வெற்றிகரமாகவும் அமைந்தது. ரூ.1 கோடி வரை லஞ்சம் கொடுத்து பணிக்கு வருபவர்களின் மனநிலை வேறு விதமாக இருக்கும். பணியில் சேர்ந்த உடனேயே அந்த பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு தோன்றும்.
கர்நாடகத்தின் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. இதை முதல்-மந்திரி சரிசெய்ய வேண்டும். முன்பெல்லாம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கர்நாடகம் வர அதிகம் விரும்புவார்கள். ஆனால் அந்த நிலை தற்போது மாறிவிட்டது. அந்த அதிகாரிகள் கர்நாடகத்திற்கு வர தயக்கம் காட்டுகிறார்கள். லஞ்சம் கொடுத்து பணிக்கு வருபவர்கள் ஏழை மக்களின் நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கும். எதற்கெடுத்தாலும் காங்கிரசை குறை சொல்கிறார்கள். நாங்கள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.