அரசு ஊழியர்களுக்கு இனி 15 நிமிடங்கள் யோகா இடைவேளை - அரியானா அரசு அறிவிப்பு!

ஒய்-பிரேக் செயலி வாயிலாக, யோகா இடைவேளை பயிற்சியை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update: 2022-04-28 11:02 GMT
சண்டிகர்,

அரியானா மாநில அரசு, அதன் அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் யோகாவை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு பணியிடங்களில் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் யோகா இடைவேளை (ஒய்-பிரேக்) வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

இதனால் ஊழியர்களின் மன அழுத்தம் குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும்.இது தொடர்பாக அரியானா கூடுதல் செயலாளர் (சுகாதாரம்)  எழுதியுள்ள கடிதம் அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 

மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறையானது, அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ஒய்-பிரேக் ஐ தங்கள் பணியாளர்களிடையே பிரபலப்படுத்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, ஒய்-பிரேக் செயலியை தங்கள் அலுவலகங்களில் செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. 

அமைச்சகம் மற்றும் அரியானா அரசின் உத்தரவுப்படி, அனைத்து துறைகள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்கள், தங்கள் அலுவலகங்களில் ஒய்-பிரேக் செயலி வாயிலாக, யோகா இடைவேளை பயிற்சியை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்மூலம்,  தனிநபர்களின் மன அழுத்தத்தைத் தணிக்கவும், புதுப்பிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யவும் முடியும் என்று நிரூபனமாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்