சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்
சமூக சீர்திருத்தவாதி நாராயண குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி,
கேரளாவில் பிறந்த சமூக சீர்திருத்தவாதியும், துறவியுமான நாராயண குருவின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று ஓராண்டு கால விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது, நாராயண குருவுக்கு புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது:-
நாராயண குரு, சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்து போராடினார். ‘ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்று உபதேசித்தார். அவரது உபதேசம், நமது தேசபக்திக்கு ஆன்மிக பரிமாணம் அளிக்கிறது.
இந்தியர்களான நமது ஒரே சாதி-இந்தியத்தன்மை தான். ஒரே மதம்-சேவை தர்மம். ஒரே கடவுள்-இந்திய தாய்.
கல்வி, அறிவியல் போன்ற நவீனத்துவம் பற்றியும் நாராயண குரு பேசினார். அதே சமயத்தில், பல்லாயிரம் ஆண்டுகால இந்தியாவின் பாரம்பரியம், தர்மம், நம்பிக்கை ஆகியவற்றின் பெருமைகளை பேசுவதற்கு அவர் வெட்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.