அனுமன் பஜனை விவகாரம்: நவ்நீத் ரானா பின்னணியில் பா.ஜ.க. உள்ளது - சிவசேனா தாக்கு
அனுமன் பஜனை விவகாரத்தில் நவ்நீத் ரானா எம்.பி.யின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.;
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்த சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா அவரது கணவர் ரவி ரானா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இரு சமுதாயத்தினருக்கு இடையே பகைமை தூண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான மாதோஸ்ரீக்கு வெளியே அனுமன் பஜனை நடத்த உள்ளதாக சுயேட்சை எம்.பி.நவ்நீத் ரானா, அவரது கணவர் ரவிரானா கூறியதற்கு பின்னணியில் பா.ஜனதாவின் அழுகிய மூளை இருக்கிறது.
ரானா தம்பதியினர் நகரின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் தாங்கள் நடத்த விரும்பும் நிழ்ச்சியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் அலுவலக லாபியில் நடத்த வேண்டும்.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இந்துத்வா சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தில் அனுமன் பஜனை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் மாதோஸ்ரீக்கு வெளியே இதை செய்ய ஏன் வலியுறுத்தப்பட்டது?
பா.ஜனதா செய்யும் குழப்பங்களை ஆதரிக்க முடியாது. இந்துத்வா என்பது கலாசாரம். குழப்பம் இல்லை. அமராவதி தொகுதியில் போட்டியிட்டபோது நவ்நீத் ரானா போலி சாதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது. உண்மையின் வழிகாட்டியான ராமரை பின்பற்றுபவர்
அனுமன். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நவ்நீத் ரானா அந்த அனுமனை வைத்து அரசியல் செய்கிறார். ஒட்டுமொத்த பா.ஜனதாவும் இதை வைத்து விளையாடுகிறது. இதுபோன்ற போலியான நபரின் தோள்களில் அமர்ந்து அனுமன் பஜனையை பாராயணம் செய்ய பா.ஜனதா விரும்பினால், அது ராமர் மற்றும் அனுமனை அவமதிக்கும் செயலாகும்.
நவ்நீத் ரானா 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியுடன் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது பா.ஜனதா முகாமில் நுழைந்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை பற்றி மோசமாக விமர்சிப்பவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு சலுகை கிடைக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.