30-ந் தேதி முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

வருகிற 30-ந் தேதி முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-04-25 18:59 GMT
Image Courtesy: PTI
புதுடெல்லி, 

முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது.

கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 30-ந் தேதி டெல்லியில் நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டும் பிரதமர் மோடி, மாநாட்டை தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா, கோர்ட்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்குமாறும், அதற்காக தேசிய நீதித்துறை கட்டமைப்பு ஆணையம் என்ற அமைப்பை உருவாக்குமாறும் சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு யோசனை கூறியிருந்தார். அதுபற்றி ஆலோசிக்கப்படுகிறது.

நீதித்துறை சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படுகிறது. நீதிபதிகள் காலியிடங்களை நிரப்புதல், வழக்குகள் தேக்கம், சட்ட உதவி சேவைகள், எதிர்காலத்துக்கான செயல்திட்டம், மூன்றாம் கட்டமாக மின்னணு கோர்ட்டுகளை உருவாக்குதல் ஆகிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

முதல்-மந்திரிகளும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளும் பல்வேறு அமர்வுகளாக விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவார்கள்.

மேலும் செய்திகள்