பாஜகவினர் விரக்தியில் உள்ளனர்: சரத் பவார் விமர்சனம்
மீண்டும் ஆட்சிக்கு வர முடியாததால் பா.ஜனதாவினர் விரக்தியில் உள்ளனர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் பஜனை பாடப்போவதாக அறிவித்து இருந்த சுயேச்சை எம்.பி. நவ்னீத் ரானா, ரவி ரானா எம்.எல்.ஏ. கைது, கிரித் சோமையா கார் கண்ணாடி உடைப்பு மற்றும் ஒலிப்பெருக்கி விவகாரத்தால் மராட்டிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து புனேயில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரம் வரும், போகும். அதற்காக விரக்தி அடைய வேண்டிய தேவையில்லை. சிலர் விரக்தியில் உள்ளனர். அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு (2019 சட்டசபை தேர்தல்) முன் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே அவர்கள் விரக்தியில் உள்ளனர்.